சாப்பிட்ட பின்னர் நடைப் பயிற்சி செய்வதால் உடல் எடையைக் குறைக்க முடியுமா..?

நடைப்பயிற்சிக்குப் பின் களைப்பில் நல்ல தூக்கம் வரும் என்கின்றனர்; எனவே இரவு வேளையில் இதைச் செய்தால் தூக்கமில்லாமல் சிரமப் படுவோருக்கும் உதவும்.

முழுமையான உணவை சாப்பிட்டபின் நடக்க வேண்டும், என்பது பலருடைய கனவாக வேண்டுமென்றால் இருக்குமே தவிர அதை சாத்தியப்படுத்துவது மிகவும் சிரமம் என்றே கருதுகிறேன். ஏனெனில் யாருக்குதான் நன்கு சாப்பிட்ட உடனேயே எழுந்து நடக்க வேண்டும் என்று தோன்றும். சாப்பிட்டதும் அப்படியே நகர்ந்து முதுகை சாய்த்துக் கொண்டு சொர்கம் போகத் தோன்றுமே தவிர சாக்ஸ் மாட்டிக் கொண்டு ஷூ போட்டுக் கொண்டு நடக்க வேண்டும் என்று தோன்றுமா..?

ஆனால் அப்படிப் போவதால் எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள். அதுவும் குறைந்தது 1000 அடிகளாவது எடுத்து வைக்க வேண்டும் என்கின்றனர்.

அவ்வாறு சாப்பிட்ட உடன் நடப்பதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகுமாம். கொழுப்பு சேராது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. இரத்த ஓட்டம் சீராகும். அதேசமயம் உடலில் மெட்டாபாலிசமும் அதிகரிக்கும் என்கின்றனர்.

Senior woman (60s) with friend (40s) power walking together.

ஆனால் இந்த நடைப்பயிற்சி என்பது வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு செய்யச் சொன்னால் முடியாது. கட்டுப்பாடான உணவு சாப்பிட்டு, புரதச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த சம ஊட்டச்சத்தான உணவை சாப்பிட்டால்தால் நடக்க முடியும் என்கிறார்கள். இதனால் ஆரோக்கியமான உடல் எடையை தற்காத்துக்கொள்ள முடியும் என்கின்றனர்.

அதேபோல் இவ்வாறு நடப்பதால் நடைபயிற்சிக்குப் பின் களைப்பில் நல்ல தூக்கம் வரும் என்கின்றனர். எனவே இரவு வேளையில் இதைச் செய்தால் தூக்கமில்லாமல் சிரமப் படுவோருக்கும் உதவும். மனதும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் ரிலாக்ஸாக இருக்கும்.

எனவே சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து குறைந்தது 15-20 நிமிடங்கள் அல்லது 1000 அடிகள் நடந்தால் உடல் எடைக்கு நல்லது. அதேசமயம் உடல் எடையைக் குறைக்கவும், கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும். இது உங்கள் தினசரி உடற்பயிற்சிக்கு சமமானது என்கிறார் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த மருத்துவர் வைஷாலி.

இந்த 20 நிமிடம், 1000 அடிகள் மட்டுமல்லாமல் நீங்கள் கூடுதலாக நடந்தாலும் நல்ல பலன் என்கிறார். அதாவது அதை 3000 அடிகளாக அதிகரித்தால் முழுமையான உடற்பயிற்சிக்கு சமம் என்கிறார். இப்படி நடைப்பயிற்சி செய்தே உடல் எடையை பலரும் குறைத்துள்ளதாகவும், ஆனால் இது உடனே நடக்காது பொறுமையாக தினசரி ஒவ்வொரு உணவுக்குப் பின்பும் நடந்தால் நிச்சயம் பயன் பெறுவீர்கள் என்று கூறியுள்ளார்.

எனவே மூச்சு முட்ட சாப்பிட்டுவிட்டு உடல் எடை கூடியுள்ளதே என்று கவலைப்படுவதைக் காட்டிலும் உண்மையில் உடல் எடையைக் குறைக்க நினைத்தால் அளவாக சாப்பிட்டுவிட்டு நடைப்பயிற்சி செய்வதை முதல் முயற்சியாக செய்து பாருங்கள்.