சபைக்குள் கறுப்பு உடையில் வந்த சஜித் அணியினரால் சபையில் குழப்பம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் கறுப்பு உடையில் இன்று பாராளுமன்றுக்கு வருகை தந்திருந்ததால் சபையில் களேபரம் ஏற்பட்டது.

இதனையடுத்து சபை நடவடிக்கைகள் பத்து நிமிடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.

பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டதை நினைவுகூர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் முழு கறுப்பு ஆடையிலும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் அரச தரப்பினர் கறுப்பு பட்டிகளை கைகளின் அணிந்துகொண்டும் சபைக்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் சபைக்குள் கறுப்பு உடைகளுடன் சஹரான்கள் வந்திருப்பதாகவும் உயிரிழந்த சஹரானுக்கு கறுப்பு உடை அணிந்து ஐக்கிய மக்கள் சக்தி அஞ்சலி செலுத்துவதாக அரச தரப்பினர் குற்றம் சாட்டியதுடன், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்த முன்னர் சஹரான் குழு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சபைக்குள் காட்சிப்படுத்தினர்.

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தவே நாம் கறுப்பு ஆடைகளுடன் சபைக்குள் வந்தோம் என தெரிவித்த எதிர் தரப்பினர்,

சஹரானின் படங்களை சபைக்குள் கொண்டுவந்ததன் மூலம் ஆளும் தரப்பினரே சஹரானை நினைவு கூர்ந்து சஹரானுக்கு சபையில் அஞ்சலி செலுத்துகின்றனர் என குற்றம் சுமத்தினர்.

எனவே எம்.பிக்கள் என்ற வகையில் நாம் வெட்கமும் வேதனையும் அடைகின்றோம் என எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.