’சட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன’- அதிபர் ட்ரம்ப் ட்வீட்!

அமெரிக்க அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப்பை விட, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் இருவரும் ட்விட்டரில் காரசார வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஜோ பைடன் அதிபர் பதவிக்கு தவறாக உரிமை கோரக் கூடாது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தன்னாலும் இதேபோல் உரிமை கோர முடியும் என்றும் கூறியுள்ளார். சட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, ஜோ பைடன் முன்னிலை வகித்து வருவதால் மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாடி வருகிறார். வாக்கு எண்ணிக்கை தெளிவான முடிவைக் காட்டுவதாகவும், நாம் இந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறப் போகிறோம் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், ‘தேர்தலுக்கு பிறகு பதட்டமான சூழல் இருப்பதை உணர முடிகிறது. ஆனால் நாம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். அரசியலின் நோக்கத்தை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். நாம் எதிர்க்கட்சியில் இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது. நாம் அனைவரும் அமெரிக்கர்கள்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.