க.பெ/ரணசிங்கம் திரைப்படத்தின் பலம், பலவீனத்தைச் சொன்ன பிரபல இயக்குனர்

குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்த பெரிய கருப்பத்தேவரின் மகன் விருமாண்டி இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘க/பெ.ரணசிங்கம்’.நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யாராஜேஷ், பவானி ஸ்ரீ, ‘பூ’ராமு, வேலராமமூர்த்தி., முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது.

வெளிநாட்டில் இறந்துபோன கணவனின் உடலை மீட்டு, சொந்த நாட்டுக்கு கொண்டுவரப் போராடும் சாதாரண பெண்ணின் கண்ணீர்க் கதை தான் க.பெ/ரணசிங்கம். இக்கதையில் தண்ணீர் பிரச்னை, கார்ப்பரேட் சூழ்ச்சி உள்ளிட்டவற்றை பேசியிருக்கும் இயக்குநர் முதல் படத்திலேயே பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறார். அதேபோல் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரின் நடிப்பையும் படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் சேரன், “மண்ணையும் மக்களின் முக உணர்வுகளையும் அச்சு அசலாக பதிவு செய்ததில் இயக்குனரும், மக்களின் மொழியில் உயிரையும் சுவாசத்தையும் பேச வைத்ததில் தம்பி சண்முகமும் அசுர வெற்றியை அடைந்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரின் முகமும் இதுவரை நினைவில்.
எடுத்துக்கொண்ட கதையும் களமும் மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பேசுவதால் தவிர்க்க இயலாத படமாக என்றும் நிற்கும். படத்தின் இறுதிக்காட்சிதான் முகத்தில் அறைகிறது.. மக்களை திசைதிருப்ப அரசியல் எதுவேண்டுமானலும் செய்யும் என சொல்கிறது.. அதுவே படத்தின் பலம்.. நீளம் அதிகம் என்பது பலவீனம்”. இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.