கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான 119பேர் தலைமறைவு: பாதுகாப்பு படை தீவிர தேடுதல்

கம்பஹா- மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சுனில் ஜயலத் மேலும் கூறியுள்ளதாவது, “மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களைத் தேடுவதில் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து கொண்டு செயற்படுகின்றோம்.

மேலும்,கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்கள் வழங்கிய முகவரிகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று  வரை 5357 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கோவிட்-19 தொற்றுடன் உறுதி செய்யப்பட்டவர்களின் பரிசோதனை அறிக்கைகள் எங்களிடம் உள்ளன.

இதில் 119 பேரைக் கண்டறிய வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.