கோவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை நடவடிக்கைகள் ரத்து

கோவிட் -19 தாக்கம் மீள ஏற்பட்டுள்ளதையடுத்து பாதுகாப்பு கருதி வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதன் தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள  காணி உரிமம் மற்றும் உரிமை, காணி ஆவணம், காணி எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட காணி தொடர்பான பிணக்குகளை தீர்த்து வைக்கும் முகமாக விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் புளியங்குளம் இராமனூர் பாடசாலை, குடியிருப்பு இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, செட்டிகுளம் பிரதேச செயலகம் என்பவற்றில் இடம்பெற்று வந்தன.

நாட்டில் கோவிட் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த விசேட காணி மத்தியஸ்தர் சபை செயற்பாடுகள் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் மீள ஆரம்பித்து இருந்தது. இந்நிலையில் கோவிட் 19 தாக்கம் மீள அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருத்தில் கொண்டு வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, எதிர்வரும் சனிக்கிழமை செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கும், ஞாயிற்றுக்கிழமை வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைக்கும் காணிப் பிணக்கு தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டவர்கள் அன்றைய தினம் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் அவர்களுக்கு மீள பிறிதொரு தினம் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.