கோட்டாவின் கீழ் இருந்த வெள்ளைவான் கலாசாரத்தை எதிர்த்துபோராடியது நானே!!

கோட்டபாயவின் கீழ் இருந்த வெள்ளை வானால் பல நூற்றுக்கணக்கானவர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள். காணாமல் ஆக்கபட்டார்கள். அதற்கு எதிராக கொழும்பு வீதிகளிலே போராடியது மனோகணேசனும் பிரபாகணேசனும் தான், என்று முன்னாள் பிரதி அமைச்சரும் ஐனநாயக இடதுசாரிகள் முண்ணனியின் வேட்பாளருமான பிரபாகணேசன் தெரிவித்தார்.
வவுனியா தரணிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

இந்த பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பல இருக்கின்றன. மனநிலை பாதிக்கபட்ட வயோதிபர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்காக பல திட்டங்களை உருவாக்க வேண்டும். குளங்களை புணரமைக்க வேண்டும். வீதிகளை செப்பனிட வேண்டும். இப்படியான வேலைத்திட்டங்களை செய்வதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் முடியாது. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வருடாந்தம் ஒரு கோடியே வழங்கப்படும். ஆனால் அமைச்சர்களுக்கு ஆயிரம் கோடி வழங்கப்படும். எனவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை குறைசொல்லியும் பிரயோசனம் இல்லை. அவர்களால் முடியாது, அதற்கு ஒரு அமைச்சர் வரவேண்டும். தமிழ் அமைச்சர் வரவேண்டும். அப்போதே இந்த விடயங்களை செய்யமுடியும்.
இந்த அரசில் முக்கியமான அமைச்சை நான் பெற்றுக்கொள்ளப்போகின்றேன். எனவேஅரசாங்கத்துடன் சண்டையிட்டு எமது மக்களுக்கு தேவையானவற்றை நான் பெற்றுக்கொடுப்பேன்.

தற்போது தேர்தல்காலத்தில் வருகை தரும் அரசியல்வாதிகள் பணங்களை அள்ளி வழங்குவார்கள். அப்படி வழங்கும் போது அதனை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தையே அவர்கள் உங்களுக்கு திரும்ப தருகின்றார்கள். ஆனால் வாக்களிக்கும் போது தன்மானத்  தமிழனாக பார்த்து தரமுள்ளவனுக்கு வாக்களிக்க வேண்டும்.

போர் நடந்துகொண்டிருந்த போது கோட்டபாய தான் பாதுகாப்பு செயலாளராக இருந்தார். அவரின் கீழேயே இராணுவம் இருந்தது. அந்த வெள்ளைவான் கலாசாரமும் அவரின் கீழேதான் இருந்தது. அந்த வெள்ளைவானைக் கொண்டு பல நூற்றுக்கணக்கானவர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டார்கள். பலர் கொலை செய்யப்பட்டார்கள். அதனை எதிர்த்து அன்று கொழும்பு வீதிகளிலே போராடியது மனோகணேசனும் பிரபாகணேசனும் தான். வேறுயாரும் இல்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மாத்திரம் வந்தார். ஏனையவர்கள் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் இருந்தனர்.
நான் இலஞ்சம் வாங்கியதும் கிடையாது  ஊழல் செய்ததும் கிடையாது. எனக்கு வேண்டியதை ஆண்டவன் கொடுத்துள்ளார்.

எனது வவுனியா அலுவலகத்திற்கு நேற்றையதினம் பெற்றோல் குண்டு வீசப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. வீசப்பட்ட குண்டு மரத்திலேபட்டு கீழே விழுந்ததனால் பாரிய சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது. எமது வளர்ச்சியையும் வேலைத்திட்டத்தையும் பொறுக்க முடியாதவர்கள் இப்படியான செயலைசெய்து என்னை வீட்டுக்குள் முடக்கச்செய்கின்றார்கள். எனினும் மக்கள் என்பக்கம் உள்ளனர். என்ற நம்பிக்கைஎனக்கு இருக்கின்றது என்றார்.