கொரோனா வைரஸ் தொற்று – நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா?

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? அல்லது ஒத்திவைப்பதா? என்பது குறித்து இன்றைய தினம் (07) கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கவுள்ளனர்.

நாடாளுமன்றில் நேற்று கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த தீர்மானத்தை இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து, மெற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 739 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4252 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.