கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 83 பேர் முழுமையாக குணமடைந்து இன்று (23) வீடு திரும்பவுள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,644 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்  இலங்கையில் இதுவரை  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6287 ஆக காணப்படுகின்றது.

இலங்கையில்  கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நாட்டில் வெவ்வேறு பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதேபோன்று தற்போது, பேலியதொட மீன்சந்தையில்  49கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து,  தற்போது கொழும்பு உள்ளிட்ட அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள மீன் சந்தைகள் சிலவற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சம்பவங்கள், கொரோனா தொடர்பான அச்சத்தை மக்களிடத்தில் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.