கொரோனா வைரஸின் 2ஆம் அலை; இன்று முதல் பிரிட்டனில் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு!

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட  நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. அங்கு மார்ச் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி  பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை அடுத்து நாடு தழுவிய  ஊரடங்குகளை அமல்படுத்திய பிரிட்டன் அரசு கொரோனா  பரிசோதனைகளையும் துரிதப்படுத்தியது. இதனால் அங்கு பாதிப்புகள்  வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டன. மேலும் கடந்த ஜூன் மாதம் முதல்  அங்கு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். 

இதனிடையே பிரிட்டனில் 3 மாதங்களுக்குப் பிறகு கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்புகள் புதிய உச்சத்தை தொட்டுவந்தது. இதனிடையே சூழலின் விபரீதத்தை உணர்ந்த பிரிட்டன் அரசு இன்று முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஊடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கு நேற்று பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அங்கு ஊரடங்கு இன்று முதல் அமலாகிறது. 

இந்த ஊரடங்கு காலங்களில் மக்கள் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைக்களுக்கு மட்டுமே  வெளிய செல்லலாம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், பணி, உடற்பயிற்சி,  மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே செல்லலாம். ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை, பள்ளிகள்,  கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும். பப்  மற்றும் ரெஸ்டாரன்ட்கள் மூடப்படும் இந்த புதிய ஊரடங்கு உத்தரவால்  வேலையிழப்பால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஊதியத்தில் 80 சதவீதம்  மானியமாக வழங்கப்படும் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. 

இதுவரை பிரிட்டனில் கொரோனாவால் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 47,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.