கொரோனா வைரஸால் வேலையிழப்பு: இலங்கையர்கள் மீது ஜோர்டானில் தாக்குதல்

ஜோர்டானில் பணியாளர்களாக கடமையாற்றிவரும் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் மீது அந்த நாட்டு காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

ஜோர்டான் – அல்காரா தொழில் பேட்டையில் நேற்றைய தினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கையர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள இலங்கையர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தொழில்வாய்ப்புக்களை இழந்து போராட்டங்களில் ஈடுபட்ட இலங்கையர்களை சந்திப்பதற்காக அந்த நாட்டிலுள்ள தூதரக அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற தூதரக அதிகாரிகளை மறித்து, அங்குள்ள இலங்கையர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

சுமார் 500ற்கும் அதிகமான இலங்கையர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, அங்கு வருகை தந்த அந்த நாட்டு காவல்துறையினர், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கோரியுள்ளனர்.

எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில் இந்த கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

கண்ணீர் புகை பிரயோகத்தில் பெரும்பாலானோர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கண்ணீர் புகை பிரயோகத்தினால் ஏற்பட்ட மயக்க நிலைமை காரணமாகவே அவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சில இலங்கையர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பாரதூரமான காயங்களோ அல்லது பாதிப்புக்களோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் அங்கு நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையரான மனோஜாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து, தமக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், தாம் வேலைவாய்ப்புக்களை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமக்காக சம்பளத்தை உரிய வகையில் வழங்கி, தம்மை பாதுகாப்பாக நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறே தாம் கோரிக்கைவிடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையிலேயே, தம்மை எப்போது நாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள் என கேட்க சென்ற தம்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜோர்டானில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைதியற்ற நிலைமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக அவர் கூறினார்.

அங்குள்ள இலங்கையர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தாம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜோர்டானில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை வெகுவிரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.