கொரோனா தொற்று-மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை அழைத்து வர முன்னுரிமை

கொரோனா தொற்று காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலையினை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களை மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த  விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக எதிர்வரும் வாரம் முதல் நாள்தோறும் விசேட  விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய நாடுகளில் சிக்கியுள்ளவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.