”கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா என்பதற்கே முன்னுரிமை”- சவுமியா சுவாமிநாதன்!

உலகை தொடர் அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதில் அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறங்கின. இதில் முதல் இரண்டு கட்ட சோதனைகள் வெற்றி எனத் தகவல் வெளியானது. ஆனால் திடீரென 3-ம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைக்காக தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று தெரிகிறது. இதனால், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மேலும் காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து சமூக ஊடக நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்,  தடுப்பூசி, பாதுகாப்பானதுதானா என்பதற்கே மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ’பொதுவாக தடுப்பூசி வேகமாக கண்டுபிடிக்கப்பட வேண்டும் என நாம் பேசுவதால், அதன் தரத்தில் சமரசம் செய்து கொள்வோம் என்று அர்த்தமில்லை. முறையான விதிமுறைகளை பின்பற்றி மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். மருந்து மற்றும் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, அது அவர்களுக்கு பாதுகாப்பானதா என்பதை பரிசோதிக்க வேண்டியதே   முதன்மையானதும் முக்கியமானதுமாகும்’ என்றார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக முயன்றால், அதற்கு நீண்ட காலம் ஆவதுடன் கடினமான ஒன்றாகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகத்திற்கு ஒரே நேரத்தில் பில்லியன் கணக்கான அளவுகளில் தடுப்பூசிகள் தேவைப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் தெரிவித்தார்.