கொரோனா தடுப்பூசி நான்கு வாரங்களில் தயாராகிவிடும்: அதிபர் ட்ரம்ப்!

கொரோனா பாதிப்பால் உலகளவில் 2,97,65,666 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,39,967 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றுநோயால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தடுப்பூசியை விரைவாக கண்டுபிடிப்பதை விட, பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாகவும், இந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா அறிவித்தது. இதனை அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் விமர்சித்தன.

இந்நிலையில் உயிரைக் கொல்லும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களில் தயாராகிவிடும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க சுகாதார அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களின் கணிப்பை சுட்டிக்காட்டி அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என்றும் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.