கொரோனா தடுப்பூசிக்கான எந்த ஒதுக்கீடும் வரவுசெலவுத் திட்டத்தில் செய்யவில்லை-சரத் பொன்சேகா

உலக சுகாதார அமைப்பு விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிக்கான எந்த ஒதுக்கீடும் வரவுசெலவுத் திட்டத்தில் செய்யவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஏற்கனவே தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா செய்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், அது எப்போது கிடைக்கும் என்றும் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார்.

தடுப்பூசியை வழங்குவதற்காக அமெரிக்கா ஒரு இராணுவ தளபதி தலைமையிலான குழுவை நியமித்துள்ளது என்றும் இதற்காக 26 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நாட்டு அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

ஆகவே இந்த செயன்முறைக்கு குறைந்தபட்சம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது 180 பில்லியன் ரூபாயை ஒதுக்க வேண்டும் என்றாலும் தற்போது வரவுசெலவுத் திட்டத்தில் 16 பில்லியன் ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அத்தோடு முறையான திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பு தேவைப்படும் ஒரு சிக்கலான செயன்முறையாக அது இருந்ததால், தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதற்கான செயன்முறையை இலங்கை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.