கொரோனா உயிரிழப்புகள்: இந்தியா, சீனா, ரஷ்யா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நோய் பாதிப்பை தடுக்க அந்நாடு போராடி வரும் நிலையில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலையும் எதிர்கொள்ளவுள்ளது. வைரஸ் பாதிப்புக்கு மத்தியிலும் அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சியும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வாக்கு சேகரிப்பின் உச்ச கட்டமாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்பும் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அதிபர் ட்ரம்ப்பை தாக்கி பேசிய எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிபர் ட்ரம்பிடம் அதனை தடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. வைரஸை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவதாக ட்ரம்ப் வெறுமனே கூறுவது பொய். அவர் பொய்யை கேட்க நான் இங்கு வரவில்லை அவர் ஒரு பொய்யர் என்பது அனைவருக்கும் தெரியும் என கூறினார். 

இந்நிலையில் ஜோ பைடனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், கொரோனா வைரஸ் உலகில் பரவியதற்கு காரணம் சீனா. அது சீனாவின் தவறு. அவ்வாறு நடந்திருக்க கூடாது. அமெரிக்காவை உற்றுநோக்கும் நீங்கள் சீனாவில் எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் ரஷ்யாவில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் அவர்கள் ஒரு போதும் கொரோனா இறப்பு தொடர்பான முழுமையான விபரங்களை வெளிவிடுவதில்லை என தெரிவித்தார். 

மேலும் தற்போது வைரஸூக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெகு அருகில் இருக்கிறோம் என தெரிவித்த அவர், தற்போதைய சூழலில் அமெரிக்காவில் கொரோனாவால் மிக குறைவான மக்களே இறந்து கொண்டிருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.