”கொரோனாவைக் கட்டுப்படுத்தாமல் தளர்வுகள் அளிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும்”- WHO எச்சரிக்கை!

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவித்து உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இருப்பினும் கொரோனா தாக்கம் குறையாததால், சுகாதார நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்பாட்டில் வைக்காமல் தளர்வுகள் அளிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகள் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகளால் மக்கள் சோர்வடைந்து விட்டதாகவும், அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புவதை புரிந்து கொள்ள முடிவதாகவும் உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘குழந்தைகள் பள்ளிக்கு திரும்புவதையும், மக்கள் பணியிடங்களுக்கு திரும்புவதையும் நாங்கள் காண விரும்புகிறோம். பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளை ஆதரிக்கிறோம். ஆனால் அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் இன்னும் இருக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது. வைரஸைக் கட்டுப்படுத்தாமல் தளர்வுகள் அளிப்பது பேரழிவுக்கான வழியாகும். விடுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் எளிதில் பரவக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.