கொரோனாவிலிருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம்!

கடந்த மாதத்தில் உடல் நலக்குறைவால் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முதலில் லேசான காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்தாலும், பின்னர், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. அவருடைய உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தொடர்ந்து தகவல் கொடுத்து வந்தார். 

பாடகர் எஸ்.பி.பியின் உடல்நலம் பெற வேண்டி திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் என பலர் வேண்டுதல் தெரிவித்து வந்தனர். மேலும் அவருக்கான சிறப்பு பிரார்த்தனையையும் திரையுலகத்தினர் செய்தனர். ஆனாலும் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் கோமா நிலைக்கும் செல்ல நேர்ந்தது. ஆனாலும் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

 இந்நிலையில் அவருக்கு இறுதியாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகடிவ் வந்திருப்பதாக அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.பி.பிக்கு நினைவு திரும்பிவிட்டதாகவும், தினமும் பாடல்கள் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் நுரையீரல் பாதிப்பு இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றும், அதிகமாக கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள சரண், வரவிருக்கும் ஐ.பி.எல் போட்டி தொடருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் ஆவலோடு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.