கொரோனாவின் மூன்றாவது அலை அமெரிக்காவில் ஏற்படும் அபாயம்!

கொரோனாவின் கோர தாண்டவத்தை முழுவதுமாக அனுபவித்த நாடு அமெரிக்கா என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்தது. ஏப்ரல் மாதத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அந்நாட்டை ஆட்டிப்படைத்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. அதன்பிறகு தடுப்பு நடவடிக்கைகளால் பாதிப்பு சற்று குறைந்தது. ஆனால் அதன்பிறகு மீண்டும் இரண்டாவது அலை ஏற்பட்டு ஜூன் மாத இறுதியில் தொற்று அதிகரித்தது. ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு 67,000 பேருக்கு தொற்று உறுதியாகி வந்தது.

கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை அமெரிக்காவை தாக்க வாய்ப்புளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பாதிப்பு அளவுக்கு தற்போதும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

அதி வேகத்தில் பரவும் திறன் கொரோனா வைரஸுக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். உலக மக்கள் தொகையில் 4% மட்டுமே அமெரிக்காவில் உள்ளது. ஆனால் மொத்த கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் 20% அந்நாட்டில்தான் பதிவாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாவிட்டால், கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.