கேரளா பத்மநாபசுவாமி கோயிலில் 10 பூசகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: அக்டோபர் 15 வரை பக்தர்களுக்கு தடை!

இந்தியாவிலேயே கோவிட் -19 பரவல் தொடங்கிய முதல் மாநிலமாக கேரளா இருந்தாலும் தொடக்கத்தில் அங்கு கோவிட் -19 பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இதன் காரணமாக  கோவிட் -19 தொற்றை கட்டுப்படுத்துவதில் ‘கேரளா மாடல்’ என்று சர்வதேச அளவில் குறிப்பிடும் அளவுக்கு அம்மாநிலத்தில் கோவிட் -19 தொற்று கட்டுக்குள் இருந்து வந்தது.

நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் தற்போது கேரளாவில் கோவிட் -19 பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது, உயிரிழப்புகளும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பணிபுரிந்து வரும் பூசாரிகள் 10 பேருக்கும், இரண்டு ஊழியர்களுக்கும் கோவிட் -19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக வரும் 15ம் திகதி வரை பக்தர்களுக்கான தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினசரி பூஜைகளை தந்திரிகள் மேற்கொள்வர் என்றும் அதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் கோயிலின் நிர்வாக அதிகாரியான ரஷீதன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார். தலைமை பூசாரிகளான இருவருக்குமே கோவிட் -19 தொற்று உறுதியாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அனைவருமே அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினர்.

பத்மநாபசுவாமி கோயிலில் மார்ச் கடைசி வாரத்தில் இருந்து பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 26ம் திகதி முதல் மீண்டும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் தற்போது 2.58 லட்சத்துக்கும் அதிகமானோர் கோவிட் -19இல் இருந்து பாதுக்கப்பட்டுள்ளனர், நோய்த்தொற்றால் 930 உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.