குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹிசா சூரசம்ஹாரம் நேற்று இரவு நடைபெற்றது

உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தப்படியாக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தசரா திருவிழா, கடந்த 17-ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறக் கூடிய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹிசா சூரசம்ஹாரம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக கோவிலில் அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளிய முத்தாரம்மனுக்கு 16  திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.

மாலையில் மீண்டும் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோயிலிலிருந்து பூஜிக்கப்பட்ட சூலாயுதம் அம்மனுக்கு வழங்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. மகிஷாசுர மர்த்தினி அவதாரத்தில் அம்மன் அபிஷேக மண்டபத்தில் பக்தர்கருக்கு  காட்சியளித்தார்.  இரவு 11.30 மணியளவில் அபிஷேக மண்டபத்தில் இருந்து கோயிலை சுற்றி வலம் வந்த அம்மன்,  கோயிலின் முன்பகுதியில் உள்ள வளாகத்தில்  மகிஷாசுரனை வதம் செய்தார்.