குடும்பஸ்தர் மரணத்திற்கு மாரடைப்பே காரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சாவடைந்திருந்தார்.

அவருக்கு தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியநிலையில் வவுனியா வைத்தியசாலையில் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா நகர திடீர் மரணவிசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் உயிரிழந்தவரின் மனைவியிடம் வாக்குமூலத்தினை பதிவுசெய்திருந்தார்.
அவரது வாக்குமூலத்தில் தவறான தடுப்பூசியினை செலுத்தியமையாலேயே தனது கணவர் மரணமடைந்ததாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தனது வாக்குமூலத்தினை பதிவுசெய்திருந்தார்.
இதனையடுத்து சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் உத்தரவிட்டிருந்தார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் அறிக்கையின் பிரகாரம் குறித்த குடும்பஸ்தரது மரணம் மாரடைப்பினால் ஏற்ப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வவுனியா மகாறம்பைக்குளம் புளியடிபகுதியை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் கடந்த இரண்டு நாட்களிற்கு முன்பாக நாய்கடிக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில் அதற்கான தடுப்பூசியை போடுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு நேற்றையதினம் அவர் சென்றுள்ளார்.அவருக்கு நாய்கடித்ததற்கான தடுப்பூசி இன்று காலை போடப்பட்டது. அதன்பின்னர் அவர் வீட்டிற்குசென்றார்.
வீட்டிற்கு சென்றநிலையில் அவருக்கு சுகவீனம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்திருந்தார்.
சம்பவத்தில் புளியடி பகுதியை சேர்ந்த சிவபாலன் வயது 49 என்ற குடும்பஸ்தரே சாவடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.