கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட 16 மாணவர்கள் கொரோனா வைரஸ் பரவல் தொற்று முன்னெச்சரிக்கையாக சுய தனிமைப்படுத்தல் – மக்கள் பீதியடைய வேண்டிய அவசியமில்லை

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 16மாணவர்கள், கொரோனா வைரஸ் பரவல் தொற்று முன்னெச்சரிக்கையாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ. லதாகரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் நேற்று (திங்களன்று) மாலை, அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் லதாகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம், தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, கிழக்கு மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், மக்கள் பீதியடைய வேண்டிய அவசியமில்லை.கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்றுவரும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 16மாணவர்கள், நீண்ட விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று, தற்போது பல்கலைக்கழகம் திரும்பியுள்ளனர்.

ஆகையால் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தங்கியிருக்கும் மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலுள்ள பல்கலைக்கழக விடுதியில், அவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதுடன் அவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.