கிளிநொச்சி பொதுச் சந்தையில் 38 வியாபார நிலையங்களுக்கு நேற்றிரவு சீல் வைக்கப்பட்டது – குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்கறி வியாபாரிகள் போராட்டம்

கிளிநொச்சி பொதுச் சந்தையில் 38 வியாபார நிலையங்களுக்கு நேற்றிரவு சீல் வைக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்கறி வியாபாரிகள்  போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள சேவைச் சந்தியில் திங்கள் நேற்றிரவு   8 மணிக்கு பின்னர் 38 மரக்கறி கடைகளுக்கு கரைச்சி பிரதேச சபையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மரக்கறி விசாயபாரிகள் தெரிவித்தனர்.

கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின் ஒப்பத்துடன் 38 வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும் அறிவித்தல் கடைகள் பூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சந்தையில் உள்ள மரக்கறி  வியாபாரிகள் 48 பேருக்கும் கூட்டம் ஒன்று  திங்கள் பிற்பகல் மூன்று  மணிக்கு கரைச்சி பிரதேசசபையின் தவிசாளரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு வாய்மொழி மூலம் சந்தை காப்பாளர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திடிரென  அறிவிக்கப்பட்டதனால் குறித்த கூட்டத்திற்கு 38 வியாபாரிகள் செல்லவில்லை. அதனால் சேவை சந்தையின் வர்த்தக சங்கத்தின் தலைவர் முன்னிலையில் சபையின் செயலாளருக்கு தவிசாளரினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக 38 வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும் சந்தை பூட்டப்பட்ட பின்னர் நேற்றிரவு 8  மணியளவில்  தங்களது வியாபார நிலையம் 25-08-2020  முதல் மூடப்படுகிறது என அறிவித்தல் ஓட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை சந்தைக்குச் சென்ற வியாபாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.  
சாதாரண ஒரு கூட்டத்திற்கு ஏழு நாட்களுக்கு முன் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் ஆனால் இதில் எந்த நடைமுறையினையும் பின்பற்றாது 11 மணிக்கு வாய் மொழி மூலம் பிற்பகல் 3 மணி கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு கூட்டத்திற்கு சமூகமளிக்காதவர்களின் வியாபார நிலையங்களை பூட்டுவது என்பது அநியாயமான செயல் என மரக்கறி வியாபாரிகளினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எவ்வித சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டு எழுத்து மூல அறிவித்தல் வழங்காத கூட்டத்திற்கு சமூகமளிக்காத வியாபாரிகளின் கடைகளை இரவு எட்டு மணிக்கு ஆதாவது அலுவலக நேரம் தவிர்ந்த காலத்தில் கடைகள் மூடப்படுகிறது என எழுத்து மூலம்  அவசர அவசரமாக ஒட்டியதன் நோக்கம் என்வென்று தமக்கு தெரியவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


இதன் போது அங்கு சமூகமளித்த கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் வியாபார நிலையங்களை பூட்டும் தீர்மானத்தை தவிசாளரின் பணிப்புக்கமைய வர்த்தக சங்கத்தின் தலைவரின் முன்னிலையில் மேற்கொண்டதாகவும் அதனடிப்படையில் நேற்றிரவு அறிவித்தல் ஒட்டப்பட்டதாகவும் தெரிவித்த அவர் இது தமது தவறான நடவடிக்கை என்றும் வியாபாரிகள் மீண்டும் தங்களின்  வியாபார நிலையத்தை திறந்து நடவடிக்கைளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். குறித்த நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புக்கு வருத்தம் தெரிவித்த பிரதேச சபை செயலாளர், இதனால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் எழுத்து மூலமாக தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். 


இதன்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த கிளிநொச்சி  உள்ளுராட்சி உதவி ஆணையாளர்  ச.பிரபாகரன் வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன்  வியாபார நிலையங்களை திறந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், குறித்த விடயம் தொடர்ந்து ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச சபை செயலாளர் மற்றும் கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் வாக்குறுதிக்கமைவாக வியாபாரிகள் மேற்கொண்டிருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
இன்றைய தினம் காலை 9.30 மணிக்கே குறித்த வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபாராத்திற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது, இந்த நிலையில் குறித்த வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.