காலநிலை மாற்றம் -பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத்தொகுதியானது மேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.அது அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் வானிலையில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும். காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாகக் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)