காய்கறிகளுக்கு நாட்டிலேயே முதல் முறையாக, அடிப்படை விலையை நிர்ணயித்த கேரளா!

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதல்முறையாக கேரளாவில், காய்கறிகளுக்கு அடிப்படை விலைஅரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 16 வகை காய்கறிகள் இதன் கீழ் அடங்கும். இந்த திட்டம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

இந்த திட்டத்தின் கீழ், காய்கறிகளின் சந்தை விலை சரிவை சந்தித்தாலும், விவசாயிகளிடம் இருந்து அடிப்படை விலையை வைத்தே காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணம் ஆன்லைன் மூலம் விவசாயிகளின் கணக்குகளுக்கு அனுப்பப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். உற்பத்தி செலவை விட அடிப்படை விலை 20% அதிகம் இருக்கும் என்றும், காய்கறிகளின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், ‘விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் விலை பிரச்சனைகளால் திருப்தி அடையாமல் இருக்கிறார்கள். ஆனால் கேரளாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர்களது நலனுக்காக பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன’ என்றார்.