காணாமல் போனவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு-செ. மயூரன்

எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.


குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களிற்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்தநிலையிலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சனைக்கான தீர்வினை எந்த ஒரு அரசாங்கமும் வழங்கவில்லை.காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளிற்கு சென்றிருக்கலாம் என்று ஆட்சிக்கு வருகின்ற அரசுகளும்,அவர்கள் சார்பான அரசியல்வாதிகளும் மாறி மாறி பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனரே தவிர பாதிக்கப்பட்ட மக்களின் மனக்கிலேசத்தை எள்ளளவும் சிந்தித்து பார்க்காத நிலையே நீடித்துவருகின்றது.
30 வருட போரில் பெரும் பாதிப்புகளை சந்தித்த எமது மக்கள் தமது குடும்பத்திலும் ஒருவரை இழந்துவிட்டு அவர்களது உண்மை நிலை தெரியாமல் வீதிகளில் போராடியே காலத்தை கழிக்கவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கணவனை இழந்த மனைவி,பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள்,என அவர்கள் அனுபவிக்கும் மனவேதனையை பாதிக்கப்பட்டவர்களால் மாத்திரமே உணர்ந்துகொள்ள முடியும்.
தற்போது அதிகாரத்தில் உள்ள பௌத்த மேலாதிக்க அரசு ஆட்சிபுரிந்த காலப்பகுதியிலேயே தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்ததுடன், இறுதி போரின்போது இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வெளியேறிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் காணாமல் போகச்செய்யப்பட்டனர், அன்று சரணடைந்தவர்கள் 11 வருடங்கள் கழித்து இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோராகவே உள்ளார்கள். 


எனவே அதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய முழுப்பொறுப்பும் அன்று பாதுகாப்பு அமைச்சராகவும்,அதன் செயலாளராகவும் பதவி வகித்த மகிந்த,கோட்டா ஆகியோரிடமே உள்ளது.எனவே இலங்கை ராணுவம் மீது நீதியான விசாரணை ஒன்றினை முன்னெடுக்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற உண்மைநிலையினை அறிந்துகொள்ளமுடியும்.  

எனினும் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையில் செயற்படும் இந்த அரசு இராணுவத்தை விசாரித்து காணாமல் போனவர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
எனவே இந்த அரசுக்கு எதிராக உறுதியான போராட்டங்களை முன்னெடுத்து, சர்வதேச நீதி விசாரணையை கோரி பயணிக்க வேண்டிய முக்கிய கட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளும்,தமிழ் மக்களும்   தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச சமூகம் இந்த அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் போதே இந்தப்பிரச்சனைக்கான நீதியான தீர்வினை தமிழ்மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே சர்வதேச நீதி கோரி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் குறித்த ஆர்பாட்டத்திற்கு எனது ஆதரவினை முழுமையாக தெரிவித்துக்கொள்வதுடன், பொதுமக்கள்,வர்த்தகர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பும் பேதங்களை மறந்து இப்போராட்டங்களுக்கு தமது ஆதரவினை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.