காட்டு யானைகளால் அல்லலுறும் வவுனியா மக்கள்தீர்வின்றி தொடரும் பிரச்சனை

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் தோட்டசெய்கையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்துவருகின்றனர்.  
குறிப்பாக செட்டிகுளம், நீலியாமோட்டை, கனகராயன்குளம்,,புளியங்குளம், நெடுங்கேணி,,காஞ்சூரமோட்டை,மெனிக்பாம்போன்ற பகுதிகளில் யானைகளின் தாக்கம் மிகவும் அதிகரித்தநிலையில் உள்ளது. இதனால் விவசாய,தோட்டசெய்கையாளர்கள்  வெகுவாகபாதிப்பிற்குள்ளாகிவருகின்றனர்.   
ஒவ்வொரு இரவும் வருகைதரும் யானைக்கூட்டங்கள்,பயன்தரும்பயிர்களை நாசம் செய்வதுடன்,இருப்பிடங்களையும் சேதப்படுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

குறித்த யானைகளின் தொல்லைகளிற்கு நிரந்தர தீர்வு காணுமாறு பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றமை,குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாவட்டத்தின் பிரதானவீதிகளில் பகல் நேரங்களில் வந்துநிற்கும் யானைகளால் பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  
குறிப்பாக, புளியங்குளம் – நெடுங்கேணி பிரதான வீதி,மதவாச்சி- மன்னார்வீதி, பூவசரங்குளம்- செட்டிகுளம் வீதிகளில்மாலைவேளைகளில் யானைகள் வந்துநிற்கின்றமை அண்மையநாட்களாக அதிகரித்து காணப்படுகின்றது.

இதனால் அவ்வீதி வழியாக போக்குவரத்து செய்கின்ற பயணிகள், வாகன சாரதிகள் எனப் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகிவருவதுடன். அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளநிலை ஏற்பட்டுள்ளது.