கழிவுநீர் தொட்டி: 3 ஆண்டுகளில் விஷவாயு தாக்கி 288 பேர் உயிரிழப்பு! – மத்திய அரசு தகவல்!

கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிலாளர்கள் குறித்து தேசிய கணக்கெடுப்பு எதையும் மத்திய அரசு மேற்கொண்டதா?.விஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டிகளில் இறந்தவர்கள் என்ணிக்கை எவ்வளவு?, இவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் சண்முகம் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். 

இதற்கு சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. அதில்,  கழிவு நீர் தொட்டிகளில் சுத்தம் செய்யும் ஊழியர்கள் குறித்த கணக்கெடுப்பு 2018-19ல் 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் நடைபெற்றது. இதில், கழிவுநீர் தொட்டிகளில் உயிரிழந்த ஊழியர்களின் விவரம் மத்திய அரசிடம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் மாநில அரசுகள் கொடுத்த தகவலின்படி கடந்த 3 ஆண்டுகளில், குறிப்பாக ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்பு வரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதோடு, வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தம் செய்யும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டும் என்று சமூகநீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அபாயகரமான தொட்டிகளில் இறங்கி மனிதர்களை சுத்தம் செய்ய வைக்கும் உரிமையாளர்களுக்கு 5 வருடம் சிறையும், ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சுய தொழில் கற்றல், ரூ.40,000 உதவித்தொகையும், ரூ.15 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன், 50% மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலங்கள் கொடுத்த தரவுகளின் படி கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 51,835 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 24,932 பணியாளர்கள் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 62 பணியாளர்கள் உள்ளதாக மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் கொடுத்த தரவுகளின் படி தெரியவந்துள்ளது.