களுபோவில வைத்தியசாலையின் ஊழியருக்கு கொரோனா

களுபோவில வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த ஊழியருடன் நெருங்கிப் பழகிய பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் என்றும் அவர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை திறக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையம் மூடப்பட்டிருந்தது.