கம்மன்பிலவிற்கு எதிராக 10 காரணிகளை முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணை – எதிர்க்கட்சி

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பொருளாதார ரீதியில் மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை , அமைச்சரவை அனுமதியின்றி எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்தை உள்ளிட்ட 10 காரணிகளை முன்வைத்து வலிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.

அதற்கமைய அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளாவன,

அரசியலமைப்பின் 43(1) உறுப்புரைக்கமைய அமைச்சரவையானது பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற போதிலும் , அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் அமைச்சரவையின் அனுமதியின்றி அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளமை,

அரசியலமைப்பின் 27(1) உறுப்புரைக்கமைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமையவான கோட்பாடுகளை மீறியுள்ளதோடு , அரசியலமைப்பின் 28 ஆவது உறுப்புரைக்கமைய பிரதான பொறுப்புக்களை புறந்தள்ளியுள்ளமை மற்றும் அரசியலமைப்பின் 53 ஆவது உறுப்புரைக்கமைய செய்து கொண்ட சத்தியப்பிரமாணத்தையும் மீறியுள்ளமை,

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது 2020 ஆம் ஆண்டு பாரியளவில் வீழ்ச்சியடைந்த போதிலும் இலங்கையில் எரிபொருள் விலையைக் குறைக்காமல் உயர் விலையை பேணி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் அரசாங்கம் பெற்றுக் கொண்ட இலாபம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் மற்றும் மக்களுக்கும் தெரிவிக்காமை,

அத்தோடு உலக சந்தையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டமைக்கான பயனை மக்களுக்கான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பின் மூலம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமை ,

இவ்வாறு கிடைத்த இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இரு வருடங்களுக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை ,

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போது கிடைக்கப் பெற்ற இலாபத்தை , மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படும் போது பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தால் ஸ்தாபிப்பதாக கூறப்பட்ட எரிபொருள் விலையை முறையாக பேணுவதற்கான நிதியத்திற்கு என்ன ஆயிற்று என்பது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தாமை ,

விலை குறைவின் போது அரசாங்கம் பெற்றுக் கொண்ட இலாபத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனை மீள செலுத்துவதற்கு உபயோகிப்பதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை ,

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு , இதன் காரணமாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பொருளாதார ரீதியில் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளமை,

உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் ஏற்றுமதியுடன் தொடர்புடைய சகல பொருளாதாரத்தினையும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளமை ,

அரசாங்கத்தை நியமித்த போது மக்கள் வழங்கிய நிகழ்ச்சி நிரல், அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அரசியலமைப்பை மீறியுள்ளமை , மீண்டும் மீண்டும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளமை என்பவற்றின் காரணமாக அமைச்சர் உதய கம்மன்பில தொடர்ந்தும் அந்த பதவியை வகிக்க முடியாது என்ற யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.