கம்பஹாவில் உள்ள பெண்ணொருவருக்கு கொரோனா- ஊரடங்கு சட்ட உத்தரவு அமுல்!

மினுவாங்கொட மற்றும் திவுலபிடிய பகுதியில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளுக்கு நுழைவது மற்றும் வெளியேறுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை கம்பஹாவின் சில பகுதிகளில் வசிப்போர் தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39வயதுடைய பெண்ணொருவருக்கு, சற்று முன்னர் கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த பெண், கொழும்பு ஐ.டி.எச்.வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இந்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன், கம்பஹா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால்,  கம்பஹா வைத்தியசாலையில் பணிப்புரிந்த  15 ஊழியர்கள் மற்றும் குறித்த பெண் பணிபுரிந்து வந்துள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 40 உறுப்பினர்கள் அவர்களது வீடுகளிலேயே தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது குறித்த பெண்ணுக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.