கடந்த 8 மாதங்களில் நேபாளத்திற்கு 1.77 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

கொரானா பாதிப்பால் உயிரிழப்புகள் மட்டுமல்லாமல், பொருளாதார சரிவையும் உலக நாடுகள் சந்தித்துள்ளன. விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா வருமானத்தை நம்பியுள்ள நாடுகள் பொருளாதார இழப்பில் முன்னிலையில் உள்ளன. ஊரடங்கு காரணமாக பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த 8 மாதங்களில் நேபாளத்திற்கு 1,77,675 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே அதிகம் வருகை புரிந்துள்ளனர்.  2020 ஜனவரி தொடக்கத்தில் 16,800- ஆக இருந்த இந்தியர்களின் நேபாள வருகை, பிப்ரவரியில் 16,588, மார்ச் – 6,793 ஏப்ரல் – 2, மே- 7, ஜுன் – 26, ஜூலை – 41, ஆகஸ்ட் – 23 என்ற எண்ணிக்கையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் மொத்தமாக 65,983 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 77,064 ஆக உயர்ந்தது. ஆனால், நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 34,025 ஆக குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 7,39,000 சுற்றுலாப் பயணிகள் நேபாளம் வந்து சென்றதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.