ஓணம் கொண்டாட்டம்: ஒரே நாளில் 1,000 பைக்குகளை விற்ற Royal Enfield

பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. விதவிதமான பைக்குகள் சந்தைக்கு வந்தவுடன் அதனை வாங்கி உற்சாகமாக வலம் வரவே பலரும் விரும்புவார்கள், அதிலும் Royal Enfield பைக்குகளுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். தொலைதூர பயணம் மேற்கொள்ள விரும்புவர்களின் முதல் தேர்வு இதுவாகதான் இருக்கும். 

இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், கேரளாவில் ஒரே நாளில் 1,000 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்றுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார சரிவை சந்தித்த நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டும் ஒன்று. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலையில் 23% விற்பனை பாதித்ததாக கூறப்பட்டது. ஆனால் ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் கடந்த மாதம் சற்று வளர்ச்சியையே சந்தித்துள்ளது. 

இந்நிலையில் ஓணம் விழாவை முன்னிட்டு, கேரளாவில் 59 டீலர்கள் மற்றும் 25 ஷோ ரூம்கள் மூலம் 1,000 பைக்குகளை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் Interceptor 650, Continental GT, Bullet 350 உள்ளிட்டவை அடங்கும். பல மாதங்களாக நீடித்த சரிவை இது முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில், புதிய பைக்குகளை களத்தில் இறக்கவுள்ளது.Meteor 350ஐ இந்த மாதம் இதனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.