“ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளது!” – ஜப்பான் பிரதமர்

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக உலக இயக்கம் ஸதம்பித்தது. தொற்று பரவலை பொறுத்து உலக நாடுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தற்போது ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிரிக்கெட், டென்னிஸ் என ரசிகர்களின் ஆரவாரமில்லாமல் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்க டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த ஜப்பான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையில் பேசிய புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜப்பான் பிரதமர், கொரோனாவை வெற்றி கொண்டதை மெய்ப்பிக்கும் வகையில் போட்டிகள் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், கொரோனா தாக்கத்தால் கடந்த மார்ச்சில் இருந்து போட்டிகளை தள்ளிவைக்க நேரிட்டது. இருப்பினும் அதிகரித்து வரும் தொற்றால் ஒலிம்பிக்கை அடுத்தாண்டு நடத்தப்படுமா சந்தேகம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டார்.

ஆனால், இந்த நெருக்கடியான சூழலில் ஒலிம்பிக் தொடரை நடத்துவது என்பது கடினமான விஷயம் என்று மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆனால் உலகளவில் போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கும் தடகள வீரர்களுக்கு ஜப்பான் பிரதமரின் கருத்து உற்சாகத்தை அளித்துள்ளது.