ஐ.நா. ஆணையாளர் துரோகியாம்! வழமையான பாணியில் எஸ்.பி. உளறல்!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சேல் பெச்சலட், தனது அதிகார எல்லையையும், ஐ.நா. விதிமுறைகளையும் அப்பட்டமாகமீறிச் செயற்படுகின்றார் – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து காரசாரமான விமர்சனங்களை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் முன்வைத்துள்ளார்.

எனினும், ஐ.நா. பொதுச்சபைக்கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள எமது ஜனாதிபதியை ஐ.நா.செயலாளர் கௌரவத்துடன் வரவேற்றார். ஐ.நாவுடன் இணைந்து பயணிப்பதற்கும், ஐ.நாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் இதன்போது கூறப்பட்டுள்ளது. மிகவும் சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையொட்டி நாடு என்ற வகையில் பெருமையடைகின்றோம்.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் என்பவர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அதிகார எல்லை மற்றும் ஐ.நா. பிரகடனங்களைமீறி அப்பட்டமாகமீறி சட்டவிரோதமானமுறையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். இலங்கைக்குள் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றி கதைப்பதற்கு அவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. உள்ளக விவகாரங்களில் கையடிப்பதற்கு இடமில்லை என ஐ.நா. பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்கையில் மில்சேல், எம்மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை தொடுத்துவருகின்றார். மிச்சேல் அமெரிக்காவுக்கு சார்பானவர். தனது தாய் நாட்டுக்கு துரோகம் இழைத்தவர்.” -என்றார் எஸ்.பி. திஸாநாயக்க.