ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து விருப்ப ஓய்வு கேட்டு சகாயம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 6 ஆண்டு காலத்துக்கும் மேல் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விருப்ப ஓய்வு ( VRS ) கோரி அரசிடம் விண்ணப்பித்துள்ளார். ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில், தற்போது VRS கேட்டு விண்ணப்பித்துள்ளதால், இன்னும் இரு மாதங்களில் பணியில் இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ். விடுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சகாயம் ஐ.ஏ.எஸ்., சமூக சேவை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்தது, டாமின் தலைவராக செயல்பட்ட போது, நஷ்டத்தில் இயங்கிய நிறுவனத்தை லாபத்தில் இயங்கச் செய்தது உள்ளிட்ட பணிகளை சகாயம் ஐ.ஏ.எஸ். செய்துள்ளார்.

அறிவியல் நகர துணைத்தலைவர் என்ற முக்கியத்துவம் இல்லாத பதவியில் 6 ஆண்டுகாலமாக பணியாற்றி வருவதால், சகாயம் ஐ.ஏ.எஸ். விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் சிவில் சர்வீஸஸ் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு பயிற்சி வழங்கும் பணியில் சகாயம் ஐ.ஏ.எஸ். ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.