ஐரோப்பிய ஒன்றியம் லெபனானுக்கு 33 மில்லியன் யூரோக்களை விடுவிப்பதாக அறிவிப்பு

பெய்ரூட்டில் உள்ள அவசர சேவைகள் மற்றும் மருத்துவமனைகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில் 33 மில்லியன் யூரோக்களை லெபனானுக்கு விடுவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

தேவை என்ன என்பதை மதிப்பீடு செய்த பின்னர் புனரமைப்புக்கு கூடுதல் நிதி திரட்ட ஒரு நன்கொடையாளர் மாநாடும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்டார், சைப்பரஸ், பிரித்தானியா, அமெரிக்கா, மலேசியா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் மருத்துவ உதவிகள், நிவாரணப் பொருட்கள், மீட்புப் படையினரை அனுப்பியுள்ளன.

முன்னதாக, வெடிப்பு சம்பவத்தினால், கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள லெபனானுக்கு, 2 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக அவுஸ்ரேலியா அறிவித்தது.

பேரழிவுகரமான வெடிப்பில், குறைந்தது 137பேர் உயிரிழந்ததுடன் ஐயாயிரம் பேர்வரை காயமடைந்துள்ளனர். மேலும், 200,000 முதல் 250,000பேர் வரை வீடுகளை இழந்துள்ளனர்.