எல்லை விவகாரம் பற்றி பேசிய மைக் பாம்பியோ.. கொந்தளித்த சீனா!

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அதன்பிறகு பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய இறையாண்மையை காப்பதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணைநிற்கும் என தெரிவித்திருந்தார். மேலும் எல்லை மற்றும் கொரோனா விவகாரத்தில் சீனாவை குற்றஞ்சாட்டியிருந்தார். 

இதற்கு சீனா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கருத்து சர்வதேச, அடிப்படை தூதரக உறவுகளுக்கான விதிமுறைகளை மீறிய பேச்சு என விமர்சித்துள்ளது. எல்லை விவகாரம் இந்தியா, சீனாவுக்கு இடையிலானது என்றும், இதில் மூன்றாம் தரப்பு தலையிடுவதற்கான இடம் கொடுக்கப்படாது என்றும் சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில் மேலும் கூறியுள்ளதாவது, ‘அமெரிக்கா பழைய பொய்களையே மீண்டும் கூறிக் கொண்டு இருக்கிறது. எல்லை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யும் திறன் இரண்டு நாடுகளுக்கும் இருக்கிறது. கொரோனா விவகாரத்தில் உலக மக்களை சீனாவுக்கு எதிராக திசைதிருப்பும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதில் சீனா மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.