”எந்த நாட்டுடனும் போரில் ஈடுபடும் எண்ணம் இல்லை”- சீன அதிபர் விளக்கம்!

கொரோனா பாதிப்பால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அவதிப்பட்டு வரும் சூழலில், சீனா எல்லைப் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளது. ஐ.நா வின் ஆண்டு பொது சபைக் கூட்டம் கொரோனா பாதிப்பு காரணமாக காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், எந்த நாட்டுடனும் போரில் ஈடுபடும் நோக்கம் இல்லை என விளக்கமளித்துள்ளார். மற்ற நாடுகளுடன் இருக்கும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதில்தான் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் கொரோனா பரவல் தொடர்பாக அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. கொரோனா பற்றிய உண்மைகளை சீனா மறைத்து விட்டதாக அதிபர் ட்ரம்ப் கூறி வருகிறார். இதற்கு சீனா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய அதிபர் ஜி ஜின்பிங், ‘கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.