எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் வேல்ஸில் நாடளாவிய ரீதியிலான முடக்கம் அறிவிப்பு

வேல்ஸில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 9 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியிலான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் விடுதிகள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீட்டுக்கு வெளியே ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான கட்டுப்பாடுகள் இன்றி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என முதல் அமைச்சர் மார்க் டிரேக்போர்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் இறுதிச் சடங்குகள் மற்றும் திருமணங்களைத் தவிர, வழிபாட்டுத் தலங்கள் மூடப்படும் என்றும் வணிகங்கள், சமூக நிலையங்கள், நூலகங்கள் போன்றன மூடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

வேல்ஸில் ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் 15 வரை 4,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் வேல்ஸுக்கு வெளியேயும் உள்ளேயும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வேல்ஸில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒன்லைன் கற்றல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.