எதிர்பார்ப்புகளின் மத்தியில் பிரிந்த கட்சித்தலைவர்கள் சிலர் எம்முடன் இணைந்து இணைந்துகொள்வார்கள்.

எதிர்பார்ப்புகளின் மத்தியில் பிரிந்த கட்சித்தலைவர்கள் சிலர் எம்முடன் இணைந்துகொள்வார்கள்
           சி.வி. விக்னேஸ்வரன்

சிறுசிறு பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் பிரிந்த சக அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் எம்முடன் வந்துவிரைவில் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மானிப்பாயில் இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,


சுமந்திரனின் அறிக்கைகளும், பத்திரிகைச் செய்திகளும் எமக்கு அதிர்ச்சி தருவனவாக உள்ளன. அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டே அவரது அறிக்கைகள் வெளிவருகின்றன. அவர் மிகவும் தெட்டத் தெளிவாக இதனைச் சொல்லியிருக்கின்றார். அவர் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது டெலிபோன் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று அமைச்சுப் பதவி பெறுவதில் எமக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணைதர வேண்டும் எனக் கேட்டதன் மூலம் தமிழ் மக்களை முட்டாள்கள் என்றும், சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும், ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் போலத் தெரிகிறது. இவற்றின் அடிப்படையில் எந்தளவுக்கு இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையைத் தடுத்து நிறுத்தும் வகையில் இவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள மற்றையோரும் செயற்பட்டிருப்பார்கள் என்று புரிகின்றது.

பொருளாதார அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டும் என்ற கூற்றில் முரண்பாடு இருக்கின்றது. முன்னர் இக் கூட்டமைப்பினர் தான் அவர் அமைச்சுப் பதவியைப் பெற்றதன் காரணமாக டக்ளசை வசை பாடினர். இப்போது டக்ளசின் மீது மதிப்பு வந்துவிட்டதா அல்லது அபிவிருத்தி மீது அபிமானம் பிறந்து விட்டதா? உண்மையிலேயே இவர்களுக்கு அபிவிருத்தி மீது அக்கறை இருந்திருக்குமாயின் வட மாகாண சபைக்கு ஒத்துழைப்பை வழங்கி முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு உதவியிருக்க முடியும். ஆனால் எந்தவிதத்திலும் எமக்கு உதவாதது மட்டுமன்றி மறைமுகமாக எதிர்ப்புக்களையே காட்டி வந்தனர்.

எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்மை முகம் அண்மைக் காலமாக தெரியத் தொடங்கியிருக்கின்றது. தம்மை வளப்படுத்துவதற்கும் சொத்துக் குவிப்பதற்கும், மாடமாளிகை, சொகுசுகார் என அவர்கள் சிந்தனைகள் ஆகாயத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. அவர்களுக்கு மக்கள் மீதோ அல்லது அவர்களின் அபிலாசைகள் பற்றியோ எந்தவித கரிசனையும் இல்லை. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தொகையின்றி அழிக்கப்பட்ட எமது உறவுகளின் குடும்பத்தினர் பற்றி சற்றேனும் சிந்தித்திருந்தால் இவ்வாறான குறுகிய சுய அபிவிருத்தி நோக்கங்களின் மேல் ஈடுபாடு சென்றிருக்காது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதோ அல்லது ஏனைய அரசியல் கட்சிகள் மீதோ எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் தான் என்னைப் பார்த்து அஞ்சுகின்றார்கள் போலத் தெரிகின்றது. அரசாங்க அதிகாரிகளைக் கொண்டு பிழையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள். நடவாத நிகழ்வுகளை நடந்ததாகக் கூறுகின்றார்கள். நிதி நிர்வாகத்தில் இலங்கையிலேயே முதற்பரிசைப் பெற்ற எம்மை நிர்வாகம் தெரியாதவர்கள் என்கின்றார்கள். பொய்களை மூட்டை கட்டி வந்து தமது கூட்டங்களில் அவிழ்த்துவிடுகின்றார்கள்.

நான் வாராந்தம் பத்திரிகைகளில் வழங்கி வருகின்ற கேள்விபதில்கள் மக்களுக்கு ஒரு தெளிவூட்டலை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனைக் கலைக்கும் முகமாக தேர்தலுக்கு முதல் நாள் என் மீது கூடுதல் அக்கறை கொண்ட சில பத்திரிகையாளர்கள் இணைந்து என்மீது கேள்விக்கணைகளைத்தொடுக்க ஆயத்தமாகின்றார்கள் என அறிந்தேன். உண்மையில் கேள்வி கேட்க விரும்புபவர்கள் அல்லது அரசியல் தெளிவை தமது பத்திரிகை வாயிலாகத் தெரியப்படுத்த விரும்புபவர்கள் அவர்களின் கேள்விகளை நான் பதிலளிக்கக் கூடிய வகையில் தேர்தலுக்கு முற்கூட்டியே தொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தலுக்கு முன் பதில் கூற முடியாத விதமாகப் பொய்யான அடிப்படையிலான கேள்விக் கணைகளைத் தொடுக்க இருப்பது கோழைத்தனத்தையும் அவர்களின் பயத்தையுமே பிரதிபலிக்கின்றன.

நான் போலி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அரசியற்தீர்வு பெற்றுத் தருவேன், அரச வேலை பெற்றுத் தருவேன் என்று ஏமாற்றுபவன் அல்ல. ஆனால் எமது நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாக மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏற்கனவே புத்திஜீவிகள் பலர் புலத்திலும் நிலத்திலும் எம்முடன் ஒன்றிணைந்து இம் மாற்றத்திற்காக உழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அத்துடன் வடக்குகிழக்கைச் சேர்ந்த ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. கொள்கை மற்றும் அணுகுமுறைகளின் அடிப்படையில் மேலும் பலரை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். தற்போது தனியாகப் பிரிந்து நிற்கின்ற அல்லது சுயேட்சையாக களமிறங்கியிருக்கின்ற கட்சிகளில் இருந்து பலர் கொள்கை அடிப்படையில் எம்முடன் வந்து இணைந்து கொள்ள வாய்ப்பிருக்கின்றது. சிறுசிறு பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் பிரிந்த சக அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் எம்முடன் வந்துவிரைவில் இணைந்து கொள்வார்கள்.