எகிப்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் அகழ்வாராய்ச்சியாளர்கள் மம்மி சவப்பெட்டியை திறந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

பண்டைய எகிப்து நாகரிகத்தில் இறந்த மன்னர்களின் உடல்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கையின் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தப்படும் வழக்கம் இருந்துள்ளது. இதனை மம்மி (Mummies) என்றழைக்கின்றனர். மனிதர்கள் மட்டுமல்லாது பூனை, முதலை உள்ளிட்ட உயிரினங்களையும் பண்டைய காலத்தில் மம்மியாக்கியுள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிக்களில் சுமார் 9,400 ஆண்டுகளுக்கு முந்தைய மனித மம்மியும் ஒன்றாகும்.

அகழ்வாராய்ச்சியாளர்களால் இதுவரையில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மம்மிக்கள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகளில் தொல்லியல் அறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எகிப்தின் Saqqara என்ற பகுதியில் இந்த ஆண்டு 59 மரப்பெட்டிகளில் சீலிடப்பட்ட மம்மிக்கள் கிடைத்தன. இவை 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப்படுகிறது.

இதில் ஒன்றை முதல் முறையாக பொதுமக்களின் முன்னிலையில் திறக்க எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் துறையை சேர்ந்த அதிகாரிகள் முடிவு செய்தனர். 

அதன்படி, கடந்த சனிக்கிழமையன்று ஒரு மரப்பெட்டியிலுள்ள மம்மியை அகழ்வாராய்ச்சியாளர்கள் திறந்தனர். அந்த பெட்டிக்குள் துணிகளால் சுற்றப்பட்ட பிரத்யேக முறையில் அடக்கம் செய்யப்பட்ட சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல் நல்ல நிலையில் இருப்பதை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர்.