ஊரடங்கு குறித்த தீர்மானம் இன்று!

மேல் மாகாணத்தின் நிலைமையை மறுஆய்வு செய்து முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவை நீக்குவதா என்பது குறித்து, கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று கூடி முடிவினை எட்டும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமை முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், திங்களன்று அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், மேல் மாகாணத்திற்குள் முடக்கம் தேவைப்படும் பகுதிகள், தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்படும் என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

சமீபத்திய வாரங்களில், கொழும்பு மாவட்டத்தில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள அதே நேரத்தில் 5,800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாவட்டத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாகாணத்தில் விதிக்கப்பட்ட 10 நாள் ஊரடங்கு உத்தரவு வைரஸ் மேலும் பரவுவதைத் தடுத்தது, ஏனெனில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு என்பது தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கடைசி முயற்சியாகும் எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.