உலகிலேயே முதன்முறையாக பயணிகளுக்கு இலவச காப்பீடு வழங்கும் நிறுவனம்.

உலகிலேயே முதல் முறையாக எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் பயணிகளுக்கு இலவச கோவிட்-19 காப்பீட்டை வழங்க உள்ளது.

விமானத்தில் பயணிக்கும் போது, பயணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களின் மருத்துவ செலவு, ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ளும் செலவு, ஏன் அவர்களது இறுதிச்சடங்கு செலவுகள் கூட இந்த காப்பீட்டில் அடங்கும்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, விமான சேவைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மீண்டும் விமான பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வார தொடக்கத்தில் 9,000 பேர் பணியிலிருந்து நீக்கப்படுவர் என அந்நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்திருந்தது.

“உலக நாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில் மக்கள் பயணம் செய்வதற்கான சூழலை எதிர்பார்க்கின்றனர். மேலும் அவர்களின் பயணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்” என எமிரேட்ஸ் குழுமத்தின் தலைவர் ஷேக் அஹமத் பின் சயீத் அல் மக்டோயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உடனடியாக இந்த சலுகை அமுலுக்கு வருகிறது என்றும், ஒரு பயணி, பயணம் செய்த 31 நாட்கள் வரை இந்த சலுகையை பெறலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 31ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும்.

இந்த சலுகை, பயணிக்கும் இடம் அல்லது பயணப் பிரிவு வேறுபாடின்றி அனைவருக்கும் பொருந்தும்.

இந்த காப்பீட்டின்படி ஒரு லட்சத்து 76,000 அமெரிக்க டாலர்கள் (இது இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடியே 32 லட்சம் ஆகும்) வரையிலான மருத்துவச் செலவுகள் எமிரேட்ஸ் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் விடுதியில் தனிமைப்படுத்தக் கோரினால் அதற்கான செலவும் இந்த காப்பீட்டில் அடங்கும். தனிமைப்படுத்தப்பட்டால் நாள் ஒன்றுக்கு 1.31 லட்சம் வரை (இந்திய மதிப்பில்) வழங்கப்படும்.

கொரோனா தொற்று உலகளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் விமானப் போக்குவரத்து சேவைத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.