உயிரை தியாகம் செய்வதனூடாக கொரோனா வைரஸை இல்லாதொழிக்க முடியுமென்றால், அதற்கும் தயார்

சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். உயிரைத் தியாகம் செய்வேன் என கூறத் தேவையில்லை என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மதநம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொண்ட செயற்பாடு பல்வேறு தரப்பினராலும் வெகுவாக விமர்சிக்கப்பட்டது.

இதன்காரணமாக அதுகுறித்து அவர் கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். அதன்போது தனது உயிரை தியாகம் செய்வதனூடாக கொரோனா வைரஸை இல்லாதொழிக்க முடியுமென்றால், அதற்கும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தை அடிப்படையாகக்கொண்டு தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

“கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சுகாதார அமைச்சரினால் கையாள முடியாவிட்டால், அவர் பதவி விலகவேண்டும்.

மாறாக தனது உயிரைத் தியாகமாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறத்தேவையில்லை. உயிர்த்தியாகம் அல்லது தற்கொலை என்பது பௌத்த தர்மத்திற்கு விரோதமானதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.