உயிருக்கு மிகவும் ஆபத்தான கட்டத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

கடந்த மாதத்தின் இறுதியில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து எக்மோ மற்றும் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாகவும், பிஸியோதெரபி சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி உடல்நிலை தேறிவிட்டார் என்ற நிலையில் இருந்து தற்போது மீண்டும் கவலைக்கிடம் என்ற தகவலால் அவரது ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.