ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் – ரணில் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த மைத்திரி!

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் வழங்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகிச் சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசில் குற்றவியல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசாரணைகள் அனைத்தும் அரச சார்பற்ற அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டதோடு அவை அரசியல் அழுத்தங்களுடன் இடம்பெற்றவை என்றும் இதன்போது அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய தேசிய உளவுச் சேவையின் பிரதானியும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணிப்பாளருமான பிரிகேடியர் சுரேஷ் சலே, 2015 இன் ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு பேரவையில் விடயங்களை முன்வைத்தபோது, அதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது எதிர்ப்பை வெளியிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களிடையே அமைதியின்மை ஏற்படலாம் என தெரிவித்து அதனை அவர் எதிர்த்ததாகவும் அதன் பின்னர் பிரிகேடியர் சுரேஷ் சலேவை இராணுவ புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து மாற்ற பிரதமர் ரணிலும் மற்றொரு அமைச்சரும் அழுத்தம் கொடுத்ததாகவும் மைத்திரிபால சிறிசேன சாட்சியமளித்தார்.

இதேவேளை, நாளை புதன்கிழமையும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு மைத்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.