இஸ்ரேலில் மக்கள் புரட்சி.. நெதன்யாகு பதவி விலக வேண்டும்…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கூறி அந்நாட்டு மக்கள் மிக தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இஸ்ரேலில் அந்நாட்டு அதிபருக்கு எதிராக பெரிய அளவில் அரசியல் புரட்சி வெடித்து இருக்கிறது. அங்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இருந்து இஸ்ரேல் அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. அங்கு எப்போது வேண்டுமானாலும் அரசியல் புரட்சி வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதேபோல் மக்கள் சாலைக்கு வந்து போராட்டம் செய்து வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு அங்கு மிகப்பெரிய அளவில் மக்கள் ஒன்றாக சேர்ந்து போராட்டங்கள் செய்து வருகிறார்கள்.

இந்த வருட தொடக்கத்தில் போராட்டம் வேகம் எடுத்தது. தற்போது இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிலும் நேற்று அங்கு பிரதமர் நெதன்யாகு வீடு முன்பே மக்கள் லட்சக்கணக்கில் கூடி போராட்டம் செய்தனர். இரண்டு வாரமாக தீவிரமாக நடக்கும் போராட்டம் தற்போது உச்சம் பெற்றுள்ளது. 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நெதன்யாகு வீடு முன் கூடி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

பெரிதானது

நெதன்யாகுவின் பீச் ஹவுஸ் முன் மக்கள் ஒன்றாக சேர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். இதுவரை அமைதியாக நடந்த போராட்டம் தற்போது கலவரமாக மாறியுள்ளது. அங்கு போராடும் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். இதனால் மக்கள் திருப்பி தாக்கி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் போராட்டம் கலவரத்தில் முடிந்துள்ளது. இந்த போராட்டத்திற்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகிறது.

காரணம் 1

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிறைய ஊழல்களை செய்துவிட்டார் என்பதுதான் முதல் குற்றச்சாட்டு. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது 6 க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் இருக்கிறது. அங்கு இருக்கும் மீடியாக்களுக்கு லஞ்சம் கொடுத்தது, வெளிநாட்டு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தது, நிறைய பரிசு பொருட்களை கோடிக்கணக்கில் வாங்கியது என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டு இருக்கிறது.

காரணம் 2

இன்னொரு காரணம் என்று பார்த்தால் கொரோனாவிற்கு எதிராக இஸ்ரேல் தோல்வி அடைந்துவிட்டது. கொரோனா பரவலை நெதன்யாகு சாரியாக எதிர்கொள்ளவில்லை. அவர் பரவலை தடுக்க தவறிவிட்டார். இஸ்ரேல் இதில் தோல்வி அடைய நெதன்யாகு தான் காரணம் என்று மக்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

காரணம் 3

அதேபோல் அங்கு கடைசியாக நடந்த மூன்று தேர்தலிலும் யாரும் பெரும்பான்மை பெறவில்லை. பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. தற்போது எதிர்க்கட்சி கொடுக்கும் கூட்டணியின் ஆதரவுதான் இவரை காப்பாற்றி வருகிறது. ஆனால் அதுவும் கூட இனி இருக்காது என்கிறார்கள். அங்கு விரைவில் எம்பி இடங்கள் சில காலியாகும். மீண்டும் பெஞ்சமின் பெரும்பான்மையை இழக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் அதற்கு முன்பே இவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.

காரணம் 4

இஸ்ரேலில் தற்போது பெரிய அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அங்கு பொருளாதாரம் சரிந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை 22% ஆக உயர்ந்துள்ளது. இதனால் அவருக்கு எதிராக மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இதுவும் கூட போராட்டத்திற்கு காரணமாக மாறியுள்ளது. இந்த நான்கு காரணங்களால் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

2011ல் இருந்து சிறிய அளவில் நடந்து வந்த போராட்டங்கள் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவை எல்லோரும் கிரைம் மினிஸ்டர் என்று அழைக்க தொடங்கி உள்ளனர். 2021 ஜனவரியில் இவருக்கு எதிரான புகார் விசாரிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது நெதன்யாகுவிற்கு எதிராக அரசியல் போராட்டம், மக்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.