இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் பாரிய குற்றமே – கபே அமைப்பு!

இலஞ்சம் வாங்குவதைப் போல் இலஞ்சம் கொடுப்பதும் பாரதூரமான குற்றம் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) பதில் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டில் இலஞ்சமும் ஊழலும் தொடர்ந்தும் அதிகரிக்குமானால் தேசிய வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதுடன், இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே தொடர்ந்தும் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சரத்துக்களை ஆய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் கபே அமைப்பு ஆகியன இணைந்து கருத்தரங்கு ஒன்றை நடத்தின.

தேசிய மட்டத்தில் இலஞ்சம் மற்றும் மாறல் பற்றிய சரத்துக்களை ஆய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஐந்தாண்டு செயற்றிட்டம் தொடர்பாக தெளிவூட்டும் இக்கருத்தரங்கு, சாய்ந்தமருது வரவேற்பு மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் “இலஞ்சமும் ஊழலும் நாட்டில் பெருகியுள்ளதால் அரசுக்கு செல்லவேண்டிய வரி ஒரு சில தனிநபருக்கு செல்வதால் மக்கள் மீது வரிச்சுமை ஏற்படுகின்றது” இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதன் மூலமே நாட்டை முன்னேற்றுப்பாதைக்கு இட்டுச்செல்ல முடியும்.

இலங்கை போன்ற நாட்டில் இலஞ்சம் அதிகரித்தே செல்கின்றது. இதனால் வெளிநாடுகளில் வட்டியுடன் கடன் பெற்று நாட்டை நடத்த வேண்டியுள்ளது. நாடு அபிவிருத்தியை கண்டு கொள்ளாமல் காணப்படுகிறது. சோமாலியா போன்ற நாடுகளின் வறுமைக்கு இலஞ்சம் அதிகரித்தமையும் முக்கிய காரணமாகும்.
அரச அதிகாரிகள் மக்களுடைய வரிப்பணம் மூலமே சம்பளம் பெறுகிறார்கள். அரச திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள் மக்களிடத்தில் நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் தங்களது கடமைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
இலஞ்ச ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டால் குறித்த நபர் மாவட்ட நீதிமன்றம் ஊடாக விசாரணைகள் இடம் பெறாது மாறாக கொழும்பில் மாத்திரமே விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
பொது மக்கள் பயமில்லாமல் இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறியத்தாருங்கள். எமது நாட்டை இலஞ்ச ஊழலற்ற தேசமாக மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழையுங்கள்” என்று தெரிவித்தார்.